மீனவரை தாக்கிய வழக்கில் சகோதரர்களுக்கு 2 ஆண்டு சிறை
மீனவரை தாக்கிய வழக்கில் சகோதரர்களுக்கு 2 ஆண்டு சிறை
UPDATED : நவ 25, 2026 08:08 PM
ADDED : நவ 25, 2026 08:08 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மீனவரை தாக்கிய வழக்கில், சகோதரர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த மூ. புதுக்குப்பம் சுனாமி நகரை சேர்ந்தவர் பாரதி, 41; மீனவர். இவரது மனைவி மங்கையர்கரசி, 35. இவரிடம், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த ராஜகுமாரன், 40, என்பவர் தகராறு செய்தார். இதனை தட்டிக்கேட்ட பாரதியை ராஜகுமாரன், அவரது தம்பி ராஜேஷ், 37, ஆகியோர் தாக்கினர். இதில், பாரதிக்கு, இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இது குறித்து பாரதி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி ஏழாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி வினோத் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், ராஜகுமாரனுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323ன் கீழ் மூன்று மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம், பிரிவு 326 உடன் இணைந்த பிரிவு 34ன் கீழ், இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இத்தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், ராஜேஷுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மொத்த அபராதத் தொகையில், பாரதிக்கு 20 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி மங்கையர்கரசிக்கு, 2,000 ரூபாயும் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு தரப்பில், வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜரானார்.
