அணிவகுப்பில் திடீர் பதற்றம்
-கவர்னருக்கு, போலீஸ் அணிவகுப்பு அளித்தபோது, அணிவகுப்பு அதிகாரி கத்தியை சுழற்றி உறையில் வைத்தபோது, உறைக்குள் கத்தி செல்லாததால் பதற்றமடைந்து, கத்தியை சொருக முயற்சித்தபோது, தலையில் இருந்த தொப்பி கழன்றது. இதனால் அணிவகுப்பில் சில நொடிகள் பதட்டம் நிலவியது.
1 மணி நேரம் 5 நிமிடங்கள்
சட்டசபையில் கவர்னர் காலை 9:30 மணிக்கு தனது பேச்சை தமிழில் துவங்கி காலை 10.35 மணிக்கு முடித்தார். அப்போது தேசியகீதம் இசைத்து முடித்ததும், கவர்னர், சபை உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்து விடை பெற்று சென்றார்.
கவர்னர் உரைக்கு நன்றி தீர்மானம் கவர்னரை வழியனுப்பிவிட்டு சபைக்கு வந்த சபாநாயகர் , கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சபையில் தாக்கல் செய்ய எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜான்குமார் தீர்மானத்தை முன்மொழிய, அரசு கொறடா ஆறுமுகம் அதை வழிமொழிந்தார். இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று 11ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் விவாதம் நடத்தலாம் எனக் கூறி காலை 10:45 மணிக்கு, சபை நிகழ்வுகளை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
அரசின் கொள்கை என்ன?வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கேள்வி
கவர்னர் உரையாற்றி முடிந்ததும், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் எழுந்து, மும்மொழி கல்வி திட்டம், லோக்சபா தேர்தல் தொகுதி வரையறையில் அரசின் கொள்கை, நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
அப்போது, அமைச்சர் நமச்சிவாயம், சபை தேசிய கீதத்தோடு முடிவடைந்ததை கவனித்தீர்களா. அரசின் நிலை என்ன என தெரியவில்லையா என பதிலளித்தார்.
அதேநேரத்தில் கவர்னர், சபையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் வணக்கம் கூறியபடி வெளியேறியதால் விவாதம் முடிவுக்கு வந்தது.