மக்கள் நலனை புறக்கணித்துள்ள ‘பட்ஜெட்’ தி.மு.க., அமைப்பாளர் சிவா கருத்து
மக்கள் நலனை புறக்கணித்துள்ள ‘பட்ஜெட்’ தி.மு.க., அமைப்பாளர் சிவா கருத்து
ADDED : ஆக 25, 2026 06:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி மக்களின் நலனைப் புறக்கணித்துள்ள பட்ஜெட் என தி.மு.க., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அமைப்பாளர் சிவா அறிக்கை:
மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்காத, தொலைநோக்கு பார்வையின்றி வெற்று அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. ரூ. 14,300 கோடி பட்ஜெட்டில், அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 2,200 கோடி மட்டும் தான் மிஞ்சுகிறது. இதை வைத்து எந்த வளர்ச்சியை எட்ட முடியும்.
புதிய திட்டங்களோ, மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொலைநோக்கு உத்திகள் ஏதும் இல்லாமல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
வில்லியனுாரில் வேளாண்மை மண்டலம், சித்த மருத்துக் கல்லுாரி, மருந்து பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வருவது தொடர்பாக பட்ஜெட்டில் ஏதும் சொல்லப்படவில்லை. காரைக்கால் துறைமுகத்தை அரசே திரும்பப் பெறுவது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை.
அரசுக்கு வரவேண்டிய ரூ. 1,000 கோடி அளவிற்கான மின் கட்டணம், வரி வசூல், கலால் துறை பாக்கிகளை முறையாக வசூல் செய்வதற்கான அறிவிப்பு ஏதும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய மாநில அந்தஸ்து, மத்திய நிதி ஆணையத்தின் வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை, நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பட்ஜெட்டில் பெயரளவிற்கு கூட ஏதுவும் சொல்லப்படவில்லை.
மக்கள் முன் வைக்கும் மாநில அந்தஸ்து, தொழில் வளர்ச்சியை உள்ளடக்கிய பெஸ்ட் புதுச்சேரி, உள்ளாட்சித் தேர்தல், நிதிக் குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, பழைய கடன்களை தள்ளுபடி செய்வது போன்ற முக்கிய பிரச்னைகளுக்காக முதல்வர் டில்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து சாதிக்க வேண்டும்.
புதுச்சேரி மக்களை ஏமாற்றும் ஒரு வழக்கமான கணக்கு வழக்குகளை காட்டும் பட்ஜெட்டே தவிர, எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பட்ஜெட் அல்ல. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
