ADDED : நவ 02, 2024 05:42 AM

புதுார்: மதுரை கே. புதுார் கல்குளம் கண்மாய் நீரின்றி முட்புதர் மண்டி காணப்படுகிறது.
சாத்தையாறு அணையில் இருந்து கோசாகுளம் கண்மாய்க்கு வரும் தண்ணீர் அங்கிருந்து கல்குளம் கண்மாயை வந்தடைகிறது. இதில் தேங்கும் தண்ணீரால் அருகில் உள்ள புதுார், டி.ஆர்.ஓ., காலனி, ராம வர்மா நகர், சங்கர் நகர், மண்மலை மேடு பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது. பல மாதங்களாக இக்கண்மாய் துார்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் தேக்க வழியின்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: இக்கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் மறுகால் பாய்ந்து புதுார் வழியாக வண்டியூர் கண்மாய் செல்லும். 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய், ஆக்கிரமிப்புகளால் 3 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிவிட்டது. முறையாகத் துார்வாரப்படாமல் இப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் முட்புதர் மண்டி, பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அண்மையில் பெய்த மழையில் வைகை ஆற்றின் வடகரைப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்த போதும் இக்கண்மாய் நிரம்பவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கண்மாயை துார்வார விரைந்து நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியின் குடிநீர் ஆதாரம் மீட்கப்படும்' என்றனர்.