/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலைய கடைகள் பொது ஏலம் விட உத்தரவு
/
பஸ் நிலைய கடைகள் பொது ஏலம் விட உத்தரவு
ADDED : டிச 22, 2024 07:24 AM
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் 4.41 ஏக்கரில் உள்ள ராஜிவ் காந்தி புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 29 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. ஏற்கனவே பஸ் நிலையத்தை சுற்றி 16 கடைகள் இருந்தன. புனரமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில், 31 கடைகள், காத்திருப்பு வளாகம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் முடிந்தாலும், கழிப்பறையில் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பதால், ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 31 கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வந்த 16 பேருக்கும் கடைகளை முன்னதாக ஒதுக்கவும், மீதமுள்ள 15 கடைகளை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உருளையன்பேட்டை காந்தி நகரைச் சேர்ந்த மூர்த்தி, அனைத்து கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பஸ் நிலைய 31 கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருந்த உரிமையாளர் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு கடையை எடுத்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். இது தொடர்பாக வரும் ஜன., 6ம் தேதி விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.