இடைத்தேர்தல் பிரசாரம் எதிரொலி புதுச்சேரியில் போக்குவரத்து முடக்கம்
இடைத்தேர்தல் பிரசாரம் எதிரொலி புதுச்சேரியில் போக்குவரத்து முடக்கம்
UPDATED : அக் 02, 2026 01:49 AM
ADDED : அக் 02, 2026 01:46 AM

புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்தையொட்டி, புதுச்சேரியில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, காங்., வேட்பாளரை ஆதரித்து, காங்., சார்பில், தேர்தல் பிரசார ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. அப்போது புதுச்சேரியின் முக்கி போக்குவரத்து சாலைகளான வழுதாவூர் சாலை,கோரிமேடு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் முடங்கின.
குறிப்பாக, ராஜீவ் காந்தி சதுக்கத்திலிருந்து வழுதாவூர் மார்க்கமாக செல்லும் சாலையிலும், திண்டிவனம் செல்லும் கோரிமேடு பாதையிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்க முயன்றதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால், இதில் சிக்கிய வாகன ஓட்டிகள் செல்ல வழியின்றி வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்தனர்.
இந்த நெரிசலின் உச்சக்கட்டமாக, பிரசாரத்தால் கடும் நெரிசல் ஏற்பட்ட சூழலிலும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தைச் சீரமைக்க போலீசார் யாருமே பணியில் இல்லாததே இச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2 மணி நேரத்திற்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
