மின் கம்பங்களை சூழ்ந்துள்ள கேபிள்களால் மக்கள் அச்சம்
மின் கம்பங்களை சூழ்ந்துள்ள கேபிள்களால் மக்கள் அச்சம்
ADDED : செப் 29, 2026 10:34 PM
புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதி முழுதும் உள்ள மின் கம்பங்களை சூழ்ந்துள்ள கேபிள்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி நகர வீதிகள் முழுதும் மின் விளக்குகளுக்காக ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மின் விளக்குகள் எரிய பயன்படுகிறதோ இல்லையோ, கேபிள்கள் கட்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுகிறது. சாலையோரம், சென்டர் மீடியன் என அனைத்து மின் கம்பங்களிலும் இன்டர்நெட், லோக்கல் டி.வி., கேபிள்கள் என அடுக்கடுக்காக கட்டி வைக்கப்படுகிறது.
இதில், கேபிள்கள் கட்டுவதற்காக மின் கம்பத்தின் மீது லேடர் அமைத்து நபர்கள் ஏறி இறங்கும்போதும், காற்றில் மரக்கிளை படும்போதும் மின் கம்பங்கள் அசைவதால், கம்பத்தின் அடிபாகம் சேதம் ஏற்பட்டு துருப்பிடிக்க துவங்குகிறது.
தொடர்ச்சியாக இந்நிகழ்வு நடக்கும்போது, ஒரு கட்டத்தில் லேசான காற்றுக்கே தாக்கு பிடிக்க முடியாமல் சாலையில் மின் கம்பங்கள் முறிந்து விழுகிறது.
மின் கம்பத்தில் கட்டப்பட்டு தாழ்வாக தொங்கும் மின்சார கேபிள்களால், பைக் ஒட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர காலத்தில் மின் விளக்கு பழுது பார்க்க செல்லும் ஊழியர்களும் கேபிள்களால் சிரமப்படுவதுடன், கேபிள்களை வெட்ட கூடாது என, மின்துறை மற்றும் நகராட்சியின் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதால் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மின்கம்பங்களில் தொங்கும் கேபிள்களை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகமும், மின்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
