கார் மோதி மெக்கானிக் பலி சர்வீஸ் சென்டரில் விபரீதம்
கார் மோதி மெக்கானிக் பலி சர்வீஸ் சென்டரில் விபரீதம்
UPDATED : நவ 14, 2026 01:54 AM
ADDED : நவ 14, 2026 01:54 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கார் மோதி மெக்கானிக் இறந்தார்.
ஏம்பலம் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் பசுபதி, 53; மணப்பட்டில் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு, ஆனந்தி என்ற மனைவியும் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பசுபதி நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று, இனோவா காரினை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த ஒரு நபர், காரினை ஸ்டார்ட் செய்த போது, திடீரென கண் இமைக்கும் நேரத்தில் கார் முன்புறமாக சென்று, என்ஜின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பசுபதி மீது மோதி, மதில் சுவரை இடித்து கிழே விழுந்தது.
படுகாயமடைந்த பசுபதியை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது உறவினர்கள், பணியிடப் பாதுகாப்பு வழங்க தவறிய சர்வீஸ் சென்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பசுபதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். விபத்து தொடர்பான சி.சி.டி.வி., காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
