30 தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
30 தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
UPDATED : நவ 14, 2026 04:48 AM
ADDED : நவ 14, 2026 01:54 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமை செயலகம் கருத்தரங்க கூடத்தில் நடந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள்., ஜான்குமார், நேரு, அசோக் ஆனந்த், வையாபுரி மணிகண்டன், கார்த்திகேயன், ராமு, அசோக்குமார், அய்யப்பன், ரவிக்குமார், செந்தில்குமார், அழகானந்தம், மோகன்தாஸ், நெல்லித்தோப்பு தொகுதி கார்த்திக்கேயன், விக்னேஷ், தலைமை பொறியாளர் வீரசெல்வம், அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, நபார்டு திட்டத்தின் கீழ் அந்தந்த தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன்படி, மொத்தம் ரூ.522 கோடி மதிப்பீட்டில் 61 திட்டப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், எஸ்.ஏ.எஸ்.சி.ஐ., திட்டத்தின் கீழ் ரூ.412 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 41 புதிய திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான தேவைகள் குறித்த கோரிக்கைளை அமைச்சரிடம் முன் வைத்தனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
