/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்
/
புதுச்சேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்
ADDED : ஜன 14, 2025 06:45 AM

வில்லியனுார்: புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பைபாஸ் மேம்பாலத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், முட்டத்துாரை சேர்ந்தவர் பிரபாகரன், 57; விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தற்போது, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரனின் உறவினர் பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதையொட்டி, இண்டிகோ காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பிரபாகரன், அவரது மனைவி ஏஞ்சலின், 50; மனைவியின் தங்கை சுசிலாபிரசன்னா, 37; மருத்துவமனையில் இறந்தவரின் மகள் ஷானி பிரெய்லி,12; ஆகியோர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்திரன், 38; காரை ஓட்டினார்.இரவு 11:10 மணியளவில் மதகடிப்பட்டு மேம்பாலத்தில் கார் வந்தபோது, மதகடிப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், பிரபாகரன் வந்த கார் மீது நேருக்கு நேராக மோதியது. இவ்விபத்தில் இரு கார்களும் அப்பளம்போல் நொறுங்கின.
கார் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் ஏட்டு பிரபாகரன், டிரைவர் சந்திரன், ஸ்விப்ட் காரை ஓட்டி வந்த லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முகிலன், 37; அதே கிராமத்தை சேர்ந்த கதிரவன், 52; ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சுசிலாபிரசன்னா, ஏஞ்சலின், ஷானி பிரெய்லி ஆகிய மூவரைம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஏஞ்சலின் சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காரில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
ஸ்விப்ட் காரில் இறந்து கிடந்த முகிலன், கதிரவனை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், இண்டிகோ காரில் இறந்த பிரபாகரன், சந்திரன் ஆகியோர் உடலை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தை, புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, மேற்கு எஸ்.பி., மோகன்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.