/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு போக்கியத்திற்கு வழங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தராதவர் மீது வழக்கு
/
வீடு போக்கியத்திற்கு வழங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தராதவர் மீது வழக்கு
வீடு போக்கியத்திற்கு வழங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தராதவர் மீது வழக்கு
வீடு போக்கியத்திற்கு வழங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தராதவர் மீது வழக்கு
ADDED : அக் 28, 2025 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்கியத்திற்கு வாங்கிய ரூ. 5 லட்சத்தை, வீட்டை காலி செய்த பிறகும் திரும்ப வழங்காத உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கேண்டீன் தெருயை சேர்ந்தவர் அருள்ஜோதி மனைவி ஜெயலட்சுமி, 52. இவர் போக்கியத்திற்கு வீடு தேடியபோது, புதுச்சேரி வைசியால் வீதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர், தனது வீட்டின் 3வது மாடியை போக்கியத்திற்கு விடுவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி ஜெயலட்சுமி போக்கியத் தொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை குருமூர்த்தியிடம் கொடுத்து ஒப்பந்தம் போட்டு, குடியிருந்து வந்துள்ளனர். மேலும், கூடுதலாக கடந்த 2022ம் ஆண்டு ரூ. 50 ஆயிரம் போக்கியத்தொகையாக ஜெயலட்சுமி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு கனரா வங்கியை சேர்ந்த ஊழியர்கள் ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து, உரிமையாளர் குருமூர்த்தி, வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றதாகவும், கடன் தொகையை திரும்ப செலுத்தாததால், பத்திரம் முழுகிவிட்டது. ஆகையால், 2 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யும் படி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயலட்சுமி, வீட்டின் உரிமையாளர் குருமூர்த்தியிடம் கேட்டபோது, தற்போது சூழ்நிலை சரியில்லை, நீங்கள் காலி செய்து கொள்ளுங்கள், போக்கியத் தொகையை தயார் செய்து விரைவில் கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
இதைநம்பி ஜெயலட்சுமி வீட்டை காலி செய்து கொண்டு, கேண்டீன் தெரு முகவரிக்கு சென்று விட்டனர். ஆனால், குருமூர்த்தி இதுவரையில் ஜெயலட்சுமியிடம் வாங்கிய வீட்டின் போக்கியத்தொகை ரூ. 5 லட்சத்தை திரும்ப தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
மேலும், பணம் கேட்டு சென்ற ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் குருமூர்த்தி மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

