/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.40 லட்சம் மோசடி பதிவாளர் மீது வழக்கு
/
ரூ.40 லட்சம் மோசடி பதிவாளர் மீது வழக்கு
ADDED : டிச 16, 2025 05:03 AM
புதுச்சேரி: ஜிப்மரில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், புதுச்சேரி பல்கலை துணை பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடுகின்றனர்.
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில், உறுவையாரை சேர்ந்த முரளிதரன், தன் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செவிலியர் பணி தேடி வந்தார். புதுச்சேரியில் டீக்கடை நடத்தி வரும் ராஜ்குமார், 45, என்பவர் அறிமுகமாகி, வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக, முரளிதரன், ராஜ்குமாரிடம், 40 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், ஜிப்மர் செவிலியர் வேலைக்கான முடிவுகள் வெளியானபோது, பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
பணத்தை திரும்ப கேட்டபோது, ராஜ்குமார் தர மறுத்தார். ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை விசாரித்ததில், 40 லட்சம் ரூபாயில், 5 லட்சத்தை மட்டும் தான் எடுத்துக் கொண்டு, மீதம், 35 லட்சம் ரூபாயை, அப்போது, ஜிப்மரில் பதிவாளராக பணியாற்றிய மகேஷ் என்பவரிடம் கொடுத்ததாக, அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஒதியஞ்சாலை போலீசார் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றினர். லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்போது புதுச்சேரி பல்கலை துணை பதிவாளராக பணியாற்றி வரும் மகேஷை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். அவர் 4ம் தேதி முதல் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

