/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவக்கம்
/
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவக்கம்
ADDED : பிப் 16, 2025 03:40 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் முதன் முறையாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு நேற்று துவங்கியது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, முதன் முறையாக, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
இதற்காக, புதுச்சேரியில் 21 தேர்வு மையங்கள், காரைக்காலில் 10, மாகேவில் 3, ஏனாமில் 2 என மொத்தம் 36 மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
புதுச்சேரி மாநிலம் முழுதும் 10ம் வகுப்பு தேர்வை 125 பள்ளிகளை சேர்ந்த 5,890 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 60 பள்ளிகளை சேர்ந்த 5763 மாணவர்களும் எழுதினர்.
ஒவ்வொரு தேர்வு மையத் திற்கும், பாதுகாப்பு மற்றும் தடையின்றி மின்சார சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் மாணவர்கள் மொபைல் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு கருவிகளையும் எடுத்துவர தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, மாணவர்கள் எலக்ட்ரானிக் கருவிகள் ஏதும் எடுத்து வந்துள்ளனரா என சோதனை செய்து அனுப்பப்பட்டனர்.
தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை அளிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.