UPDATED : நவ 05, 2026 05:11 AM
ADDED : நவ 05, 2026 02:15 AM

புதுச்சேரி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்திய உணவுக் கழகத்தின் மத்திய சேமிப்பு கிடங்கு கழகம், இந்திய தர நிர்ணய பணியகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
உணவு மற்றும் பொது விநியோகத்துறை மத்திய இணை மந்திரி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பையும், நுகர்வோர் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் வகையில், உணவு தானிய கொள்முதல் மற்றும் பொது விநியோகத்தின் செயல்திறன் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிய கிடங்குகளுக்கான இடங்களை கண்டறிவது விவாதிக்கப்பட்டது. உணவு தானிய சேமிப்பிற்காக அறிவியல் முறையிலான கிடங்கு வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல், பிராந்தியப் பங்குதாரர்களை சென்றடையும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், விக்னேஸ்வரன், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் முத்து மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
