பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் துவக்கம்: 9 ஆண்டுகளுக்கு பிறகு மறுகட்டமைப்பு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் துவக்கம்: 9 ஆண்டுகளுக்கு பிறகு மறுகட்டமைப்பு
UPDATED : ஜூன் 13, 2026 12:52 PM
ADDED : ஜூன் 13, 2026 04:13 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் நீண்ட காலமாக முடங்கி கிடந்த மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தற்போது புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்துடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவையும் உலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியிலும் 1998 டிசம்பரில் இந்த ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வகுப்பினரைக் கண்டறிந்து, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் மிக முக்கியப் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உள்ளது.
2017ம் முதல் முடக்கம் அரசாணையின்படி, இந்த ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடையும் போது, அதனை அவ்வப் போது புதிய உறுப்பினர்களை கொண்டு மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 2017ம் ஆண்டிற்குப் பிறகு புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கவில்லை.
இதனால், கடந்த ஒன்பது ஆண்டிற்கு மேலாக ஆணையம் செயல்படாமல் முடங்கியதால், பின்தங்கிய சமூகத்தினரின் கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் மீது எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் தேக்கமடைந்து வந்தது.
இந்நிலையில், முடங்கி கிடந்த ஆணையத்திற்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதலின் பேரில், இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அரசின் சார்புச் செயலர் ராகினி பிறப்பித்துள்ளார்.
சமூக கட்டமைப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 67 வகையான பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் உள்ளன. இந்தச் சமூகங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.,) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (பி.சி.எம்), பிற்படுத்தப்பட்டோர் மீனவ சமுதாயம் (இ.பி.சி), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (பி.டி.,) பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தீர்க்கப்படுமா? புதுச்சேரியில் வாழும் இன்னும் சில குறிப்பிட்ட ஜாதிகளைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக வலுவாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே தங்களுக்கு நியாயமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகள் கிடைக்கும் என, அந்தச் சமூக மக்கள் நம்புகின்றனர்.
ஆனால், இத்தனை காலம் இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரப்பூர்வமான ஆணையம் இல்லாததால், தொழில்நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரும் சிக்கல் நீடித்து வந்தது.
தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உறுப்பினர்களுடன் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால், கிடப்பில் உள்ள அனைத்து பிரச்னைகளும், புதிய ஜாதிகளைப் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கைகளும் முறைப்படி பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தீர்வு எட்டப்படும்.
