அரசு பணி விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம்: புதிய வழிகாட்டுதலை வெளியிட்டு எச்சரிக்கை
அரசு பணி விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம்: புதிய வழிகாட்டுதலை வெளியிட்டு எச்சரிக்கை
UPDATED : செப் 02, 2026 09:31 PM
ADDED : செப் 02, 2026 07:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் குரூப் சி- நேரடிப் பணி நியமனங்களில், விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்பட்டு வரும் 5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்டாக் உயர்கல்வி சேர்க்கைக்காக வரையறுக்கப்பட்ட அதே 35 விளையாட்டுப் பிரிவுகள் மட்டுமே இனி அரசுப் பணி நியமனத்திற்கும் தகுதியானவையாகக் கருதப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விச் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிற்கும் ஒரே மாதிரியான தகுதி நிலைகள், மதிப்பெண் வழங்கும் முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்த 5 சதவீத இடஒதுக்கீடு குரூப் சி- நேரடிப் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏ அல்லது பி பிரிவு பணியிடங்களுக்கும், பதவி உயர்வுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பைப் பொறுத்தவரை, பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பட்டியலின விளையாட்டு வீரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். வழக்கமான பணி நியமனங்களுக்கு, முந்தைய 5 ஆண்டுகளின் விளையாட்டுச் சாதனைகள் கணக்கில் கொள்ளப்படும். ஒருவேளை பணி நியமனங்களுக்கு இடையே 5 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட இடைவெளி இருந்தால், கடைசி பணி நியமன ஆண்டிலிருந்து தகுதி காலம் கணக்கிடப்படும்.
தேர்வு முறை:: விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து, அதற்கான பிரத்யேக அறிவிக்கையை புதுச்சேரி தேர்வு முகமை வெளியிடும். விண்ணப்பங்களைப் பரிசீலிக்க விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் அதிகாரி தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இக்குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து மதிப்பெண்களை வழங்குவர்.
இறுதித் தேர்வுப் பட்டியல் முற்றிலும் விளையாட்டின் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும். மேலும், 1க்கு 3 என்ற விகிதத்தில் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒரு ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்குக் காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலை பெற முயன்றால், விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதோடு, பணிநீக்கம், எதிர்கால பணி நியமனத் தடை மற்றும் குற்றவியல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன...: பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணை விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு நடைமுறையில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் சில குறைபாடுகளும் வெளிப்படைத்தன்மையற்ற சூழலும் நிலவியதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 65 விளையாட்டுப் பிரிவுகளும் புதுச்சேரி சமமாகவே கருதப்பட்டு வந்தன. இதனால், புதுச்சேரியில் உள்கட்டமைப்போ அல்லது போட்டிகளோ இல்லாத விளையாட்டுகளுக்குச் சான்றிதழ் பெற்றுச் சிலர் தவறான வழியில் பயன்பெற்று வந்தனர்.
மேலும், பழைய முறையில் பள்ளி, கல்லுாரி, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்காமல், நேரடியாக தேசிய அல்லது சர்வதேச அளவிலான சான்றிதழ்களைப் பெற்று இடஒதுக்கீட்டைக் கோரும் போக்கும் இருந்தது. இத்தகைய குறைபாடுகளைக் களைந்து, படிப்படியான போட்டிகளில் பங்கேற்றுத் தகுதியை நிரூபிக்கும் உண்மையான புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கவே இப்புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்புதிய வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், முடிவுகள் அறிவிக்கப்படாத நடைமுறையில் உள்ள பணி நியமனங்களுக்கும் இது பொருந்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 35 விளையாட்டுகள் அரசு பணிக்கான விளையாட்டு இட ஒதுக்கீட்டிற்கு வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், பால் பேட்மிண்டன், கூடைப்பந்து, பாக்சிங், கேரம், சதுரங்கம், கிரிக்கெட், சைக்கிளிங், செவித்திறன் குறைபாடுள்ளோர் விளையாட்டு, பென்சிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, கயாக்கிங் மற்றும் கனோயிங், கோ-கோ, மல்லக்கம்பம், நெட்பால், பாரா ஸ்போர்ட்ஸ், பவர்லிப்டிங், ரோலர் ஸ்கேட்டிங், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், வாலிபால், பளு துாக்குதல், மல்யுத்தம் மற்றும் யோகாசனம் ஆகிய 35 விளையாட்டுகள் தகுதியானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
