/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 'செக்'! விரைவில் வருகிறது மொபைல் கோர்ட்
/
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 'செக்'! விரைவில் வருகிறது மொபைல் கோர்ட்
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 'செக்'! விரைவில் வருகிறது மொபைல் கோர்ட்
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 'செக்'! விரைவில் வருகிறது மொபைல் கோர்ட்
ADDED : மே 04, 2024 07:19 AM

புதுச்சேரி : போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு டிமிக்கி கொடுக்கும்வாகன ஓட்டிகளுக்கு, செக் வைக்க புதுச்சேரியில் மொபைல் கோர்ட்அதிரடியாக கொண்டுவரப்பட உள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை காற்றி பறக்கவிட்டு பறக்கின்றனர். இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. போக்குவரத்து போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இதனால், திரும்பிய பக்கமெல்லாம் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து விதிமுறைகள் குறைந்தபாடில்லை.
ஹெல்மெட் அணியாமல், காரில் சீட்பெல்ட் போடாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீதிமன்றங்களிலும் போக்குவரத்து வழக்குகளும் குவிந்து வருகின்றது.
இதனையடுத்து தற்போது புதுச்சேரியில் 'இ-செலான்' முறையை கொண்டு 'ஸ்பாட் பைன்' விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறுவோரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 'ஸ்பாட் பைன்' வசூலிப்பதோடு, மீண்டும் அவர் அதே தவறு செய்தால் நேரடியாக அவரின் லைசென்ஸ் ரத்து செய்யும் தொழில்நுட்ப வசதியும், போக்குவரத்து ஆணைய அலுவலகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, நீதிமன்றங்களில் குவியும் சிறு வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும் மோட்டார் வாகனங்களில் செல்லும் சிறு குற்றம் புரிந்தவர்களை அலையவிடாமல் தண்டிக்கும் நோக்கத்திலும் மொபைல் கோர்ட் எனப்படும் நடமாடும் நீதிமன்றம் புதுச்சேரியில் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கு சென்னை ஐகோர்ட்டும், புதுச்சேரி அரசும் பச்சைகொடி காட்டியுள்ளன. இதனை யடுத்து மொபைல் கோர்ட் செயல்பட உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது 'இ-செலான்' கொடுக்கப்பட்டபோதிலும், நீதிமன்றங்களுக்கு செல்லாமல் அங்கேயே 'ஸ்பாட் பைன்' கட்டிவிட்டு வீட்டிற்கு செல்கின்றனர்.
இனி அபராத நடைமுறை அப்படி இருக்காது. சிறுசிறு சாலை விதிமீறல், வாகனப் போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும், வாகன ஓட்டிகள் நேரடியாக நடமாடும் கோர்ட்டிற்கு நீதிபதி முன் அழைத்து செல்லப்படுவர்.
மொபைல் கோர்ட் நீதிபதி விசாரித்து, உடனுக்குடன் அபராதம் விதிப்பார். இதற்காக மொபைல் கோர்ட் நீதிபதி, பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததும் மொபைல் கோர்ட்டும் அமலுக்கு வர உள்ளது.
இந்த நடமாடும் நீதிமன்றம் செயல்படும்போது வாகன ஓட்டிகளின் வழக்குகளை முடிப்பதற்கு வசதியாக இருக்கும்.
குறிப்பாக குற்றவியல் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டி இருக்காது. இதனால், கால விரயம், பொருள் விரயம் தடுக்கப்படும்.