மாநில அளவிலான பீச் த்ரோபால் போட்டி சென்னை, விழுப்புரம் அணிகள் முதலிடம்
மாநில அளவிலான பீச் த்ரோபால் போட்டி சென்னை, விழுப்புரம் அணிகள் முதலிடம்
ADDED : செப் 14, 2026 07:52 PM
புதுச்சத்திரம், செப். 15-
தமிழ்நாடு பீச் த்ரோபால் அசோசியேஷன், கடலுார் மாவட்ட பீச் த்ரோபால் அசோசியேஷன் சார்பில் நடந்த, மாநில அளவிலான சீனியர் பீச் த்ரோபால் போட்டியில், ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் அணியும் முதலிடம் பிடித்தன.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான பீச் த்ரோபால் போட்டி கடந்த 12, 13ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடந்தது. 20 மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என, 40 அணிகள் பங்கேற்று விளையாடியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், துாத்துக்குடி அணியும் இறுதிப் போட்டியில் மோதியது. இதில் சென்னை அணி 2-0 நேர்செட்டில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. துாத்துக்குடி அணி இரண்டாமிடமும், கோயம்புத்தூர் அணி மூன்றாமிடமும் பிடித்தன. சென்னை அணியை சேர்ந்த ரேக்லன்ராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பெண்கள் பிரிவில் விழுப்புரம் அணியும், கடலுார் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், விழுப்புரம் அணி 2 - 0 நேர்செட்டில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. கடலுார் அணி இரண்டாமிடம், சென்னை அணி மூன்றாமிடம் பிடித்தன. சென்னை அணியை சேர்ந்த மானசினா, சிறந்த ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு பீச் த்ரோபால் அசோசியேஷன் தலைவர்
பாலவிநாயகர் தலைமை தாங்கினார். பேட்ரன் கடலுார் மாவட்ட பீச் த்ரோபால் அசோசியேஷன் ஆத்ம வள்ளிநாதன், கடலுார் மாவட்ட பீச் த்ரோபால் அசோசியேஷன் தலைவர் சுப்புராயன், செயலர் ரோகபரணி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் த்ரோபால் அசோசியேஷன் துணைத் தலைவர் டாக்டர் சுரேஷ், வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கினார். மாவட்ட பீச் த்ரோபால் அசோசியேஷன் துணைத் தலைவர் முத்தையன், பொதுச்செயலர் மணிகண்டன், இணை செயலர்கள் பாஸ்கரன், கோவலன், ஞானஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்ட பீச் த்ரோபால் அசோசியேஷன் பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
