முதல்வர் ரங்கசாமி மீது தி.மு.க., சிவா ‘கடும்’ தாக்கு
முதல்வர் ரங்கசாமி மீது தி.மு.க., சிவா ‘கடும்’ தாக்கு
ADDED : செப் 13, 2026 11:52 PM
டாப்பில் வைக்கவும்: புதுச்சேரி: இடைதேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா பேசினார்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைதேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
முதல்வர் ரங்கசாமியை வளர்த்த தொகுதி தட்டாஞ்சாவடி. புதுச்சேரி மக்களுக்கு ஏதும் செய்யாமல், வளர்ச்சியை கொண்டு வராமல் முதியோர் பென்சன், அரிசி தருவதாகக் கூறி ஏமாற்றி அரசியல் செய்கிறார் ரங்கசாமி.
ஓட்டளித்த மக்களை துச்சமாக மதித்து புதுச்சேரியை சிதிலமாக மாற்றி உள்ளார். தொழில் வளர்ச்சி முடங்கி உள்ளது.
புதுச்சேரி சுபிட்சமாக இல்லை. மின்கட்டண உயர்வு, போக்குவரத்து பிரச்னை, குடிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு என தீர்க்க வேண்டிய பிரச்னைகள் கிடப்பில் உள்ளது. சிங்கப்பூர் போல இருக்க வேண்டிய புதுச்சேரி தற்போது முடக்கப்பட்டுள்ளது.
ஒரு தொழிற்சாலையை கூட ரங்கசாமி கொண்டு வரவில்லை. எல்லா நிறுவனங்களும் சென்று விட்டன. பாசிக், பாப்ஸ்கோ என அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. தனக்கு தேவைப்படும் நேரத்திலோ பிரச்னை ஏற்படும் போதோ மாநில அந்தஸ்தை ரங்கசாமி கையில் எடுப்பார். அவருக்கு வேண்டியவர்கள் பந்த் அறிவிப்பார்கள். அரசும் ஆதரவும் கொடுக்கும்.
ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. தற்போது சபாநாயகர் பதவி தேர்தலை கூட பதவி போட்டியால் நடத்த முடியவில்லை.
உடன் இருந்து கொல்லும் நோயாக பொது தேர்தலில் நட்பு போட்டியை வைத்திலிங்கம் நடத்தினார். நாம் வெல்லும் இடத்தில் போட்டி வேட்பாளர்கள் அறிவித்தார்.
வைத்திலிங்கம் இடைதேர்தலில் நின்றிருந்தால் நான் நின்றிருப்பேன். மக்கள் பிரச்னையை விவாதிக்காமல் சட்டசபையை கூட, 4 தினங்கள் மட்டுமே நடத்துகிறார்கள். பிரச்னையை எடுத்து சொல்ல நாங்கள் இருக்கிறோம். போராட்டங்களுக்காக, 57 முறை சிறை சென்றவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம்.
தட்டாஞ்சாவடி யாருடைய தனி சொத்தும் இல்லை. கடந்த முறை ரங்கசாமி வாங்கிய ஓட்டுகளை விட எதிராக வாங்கிய ஓட்டுகள் அதிகம். கடந்த முறை ஓட்டளித்து வென்ற பிறகும் நன்றி சொல்லக்கூட அவர் வரவில்லை. இடைதேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
