ADDED : செப் 13, 2026 11:37 PM

காரைக்கால்: இலங்கையில் இருந்து கடத்தி, 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை விற்பனை செய்த நிஜந்தன், 28, உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த 'ஆப்ரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்' துவக்கப்பட்டு, போதை பொருள் கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இதில், ஒரு கிலோ மெத்தாம் பெட்டமைன் போதை பொருளை, இலங்கையில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த நிஜந்தன் என்பவரை போலீசார், கைது செய்தனர்.
நிஜந்தன் கொடுத்த தகவலில், தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ், பாக்கியராஜ், இலங்கையை சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமி, 32, ஆகியோரை, போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7 கிலோ 605 கிராம் மெத்தாம் பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் இதுகுறித்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
