/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 நிதியுதவி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 நிதியுதவி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 நிதியுதவி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 நிதியுதவி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 16, 2025 03:00 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியாக உயர்த்தப்பட உள்ளது என, முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின விழாவில் பேசினார்.
புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்த 79வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது;
புதுச்சேரி மாநிலம், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. இந்திய குறியீட்டின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் புதுச்சேரியை 2வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். தனி நபர் வருமானத்தை ரூ.3,02,680 ஆக உயர்த்தி இருக்கிறோம். 2020ல் 2.21 விழுக்காடாக இருந்த மாநில பொருளாதார வளர்ச்சியை 8.81 விழுக்காடாக உயர்த்தியுள்ளோம்.
2020-21ல் 6.7 விழுக்காடாக இருந்த வேலை வாய்ப்பின்மையை 4.3 விழுக்காடாக குறைத்திருக்கிறோம். ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட புதிய பால் பண்ணை தொடங்குவதற்கும், அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டிற்கு 500 உயர் ரக பசுக்கள் 75 விழுக்காடு மானியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியுதவி நடப்பு நிதியாண்டு முதல் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திம்மநாயக்கன்பாளையம் மற்றும் மணப்பட்டு கிராமங்களில் 320 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படவுள்ளது.
1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ.6,500 வரை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. பாகூர் மற்றும் கரையாம்புத்துாரில் ரூ.10.95 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் கட்டப்படவுள்ளன. மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காரைக்கால் கருக்கலாச்சேரியில் மீன்பிடித் துறைமுகத்தை மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்குவதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
21 வயது முதல் 55 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 70 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விரைவில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவுபடுத்தப்படும். முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய திட்டத்தில், புதிதாக 10 ஆயிரம் பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கான மதிப்பூதியம் ரூ.6,450ல் ரூ.12 ஆயிரமாகவும், உதவியாளருக்கான மதிப்பூதியம் ரூ.4,375ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடிநீர், சாலை வசதிகள், கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம், நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் உப்பு நீக்கும் ஆலையை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.4,750 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
50 எம்.எல்.டி., கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ரூ.500 கோடியில் தொடங்கப்படவுள்ளது. அதிக உப்புதன்மையை குறைத்து குடிநீர் வழங்கும் பொருட்டு 7 இடங்களில் 1 எம்.எல்.டி., நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வழங்க நபார்டு வங்கியில் இருந்து ரூ.31 கோடிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுதேசி பஞ்சாலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 5 இடங்களில் இப்பணி விரைவில் தொடங்கப்படும். தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்க ஆவன செய்யப்படும். பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 2,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள அரசு காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

