ADDED : ஜூன் 26, 2026 03:30 AM
புதுச்சேரி: அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் நிலவி வரும் இழுபறியை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கவர்னரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற என். ஆர். காங்., சார்பில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்களாக ராஜவேலு,சிவக்கொழுந்து, மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் பா.ஜ., சார்பில் நமச்சிவாயம், ராஜசேகர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
தேர்தல் முடிந்து 50 நாட்களுக்கு மேலாகியும், புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்கப்படாமல் இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், பா.ஜ., தலைமை தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா மற்றும் சபாநாயகர் பதவி ஆகியவை வாங்குவதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றார்.
ஆனால் இரவு 8 மணி வரை அவரால் முதல்வரிடம் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் ரங்கசாமி கவர்னர் கைலாஷ்நாதனை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பு புதிய சபாநாயகர் மற்றும் இலாகா ஒதுக்கீடு குறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
