/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு முதல்வர் ரங்கசாமி டில்லி செல்ல மறுப்பு
/
மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு முதல்வர் ரங்கசாமி டில்லி செல்ல மறுப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு முதல்வர் ரங்கசாமி டில்லி செல்ல மறுப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு முதல்வர் ரங்கசாமி டில்லி செல்ல மறுப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:44 AM
புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதல்வர் ரங்கசாமி சந்திக்க வைக்க மேற்கொண்ட முயற்சி பலனிக்காததால் பா.ஜ.,வினர் விரக்தியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களாக நிர்வாக ரீதியாக முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி நடந்த சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் அதிருப்தியடைந்த முதல்வர், ஒரு அதிகாரியை கூட நியமிக்க முடியாதபோது, எதற்கு இந்த பதவி என ஆவேசமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனால், கலக்கமடைந்த பா.ஜ., தலைமை உத்தரவின்பேரில், கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு விரைந்து வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து சமாதானம் பேசினார்.
அப்போது, தனது மனக்குமுறலை கொட்டிய முதல்வரிடம், அனைத்து பிரச்னைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று முதல்வர் ரங்கசாமி, அன்று மதியம் சட்டசபைக்கு சென்று வழக்கமான பணிகளை துவங்கினார்.
இந்நிலையில், பா.ஜ., வினர் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், முதல்வரை சந்திக்க வைக்க நேற்று ஏற்பாடு செய்தனர். அமித் ஷாவும், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க ஒப்புக் கொண்டார். மேலும், சந்திப்பின்போது, அமைச்சர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் உடன் வர அமித் ஷா உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பா.ஜ.,வினர் நேற்று முதல்வரை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர்.
அதற்கு அவர் இன்று (நேற்று) காமராஜர் பிறந்த நாள் விழா உள்ளது. அதனால், வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டார்.
இதனால், அப்செட்டான பா.ஜ.,வினர், தங்கள் டில்லி பயணத்தையும் ரத்து செய்துவிட்டு, முதல்வரை எப்படி டில்லிக்கு அழைத்து செல்வது என மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.