எலெக்ட்ரிக் பஸ்களில் முதல்வர் படம் 'மிஸ்ஸிங்': கொந்தளிக்கும் என்.ஆர்.காங்., கடும் எச்சரிக்கை
எலெக்ட்ரிக் பஸ்களில் முதல்வர் படம் 'மிஸ்ஸிங்': கொந்தளிக்கும் என்.ஆர்.காங்., கடும் எச்சரிக்கை
UPDATED : ஆக 29, 2026 05:44 PM
ADDED : ஆக 29, 2026 05:41 PM

புதுச்சேரி வீதிகளில் பாய்ந்து செல்லும் எலெக்ட்ரிக் பஸ்களைப் பார்த்தால், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல... ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரின் மனநிலைக்கும் அது செம 'ஷாக்' கொடுத்துக் கொண்டிருக்கிறது.
காரணம்.. அந்தப் பஸ்களில் மிளிரும் கவர்னர் கைலாஷ்நாதனின் புன்னகை முகத்திற்கு நடுவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமியின் படம் 'அப்சென்ட்' ஆகி இருப்பதுதான்.
கவர்னர் நிர்வாகத்தின் தலையாக இருந்தாலும், இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், அதற்குத் தலைவராக முதல்வரும் இருக்கும்போது, கவர்னர் படத்தை மட்டும் போட்டுவிட்டு முதல்வர் படத்தை மறந்துவிட்டது எந்த ஊர் நியாயம் என்று ஜக்கு கட்சி தொண்டர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஆவேசப்படும் என்.ஆர்.காங். நிர்வாகிகள், யூனியன் பிரதேசம் என்பதால் எலெக்ட்ரிக் பஸ்களில் இப்படி கவர்னருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு முதல்வரை அவமரியாதை செய்துள்ளனர். அதிகாரிகள் இப்படித் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் இப்படி முதல்வர் படம் போடாமல் பஸ்சினை இயக்க முடியுமா.. வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி செய்துவிட முடியுமா..
இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. சட்டசபைக் கூட்டத் தொடரில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் பிரச்னையைப் கிளப்ப வேண்டும்.
பி.ஆர்.டி.சி., நிர்வாகம் முதல்வர் படத்தை போட உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வீதியில் இறங்கி அந்த எலெக்ட்ரிக் பஸ்களைச் சிறைபிடித்துப் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என, எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்த வந்த எலெக்ட்ரிக் பஸ்கள், இப்போது புதுச்சேரி அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கின்றன. முதல்வர் படம் ஒட்டப்படுமா... அல்லது போராட்டம் சூடுபிடிக்குமா என, புதுச்சேரி அரசியல் அனல் பறக்கிறது.
