கடல் அரிப்பை தடுக்க ஸ்டார் கற்களை கொட்ட வேண்டும்; செந்தில் கோரிக்கை
கடல் அரிப்பை தடுக்க ஸ்டார் கற்களை கொட்ட வேண்டும்; செந்தில் கோரிக்கை
UPDATED : ஆக 29, 2026 05:46 PM
ADDED : ஆக 29, 2026 05:41 PM
புதுச்சேரி: மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க ஸ்டார் கற்களை கொட்ட வேண்டும் என, செந்தில் எம்.எல்.ஏ., பேசினார்.
சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அவர், பேசியதாவது:
காலாப்பட்டு எம்.எல்.ஏ., செந்தில், அன்னை நகர், ஆலங்குப்பம் பகுதிகளில் மேல்நிலை தொட்டிகள் கட்ட வேண்டும். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க ஸ்டார் கற்களை கொட்ட வேண்டும். சின்னகாலாப்பட்டு திடீர் நகரில் பாதி பேருக்குதான் பட்டா கொடுத்துள்ளனர். விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
கருவடிக்குப்பம் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதை தீர்க்க வேண்டும். சுடுகாடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரில் புழு வருகிறது. வெள்ளை ஏரி வாய்க்காலை துார் வார வேண்டும். கருவடிக்குப்பத்தில் உள்ள பாசிக் குடிநீர் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை தனி அதிகாரி நியமித்து மீட்க வேண்டும். ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு கேன்டீன் அமைக்க வேண்டும். போலீசாருக்கு வார விடுப்பு வழங்க வேண்டும். காலாப்பட்டு தொகுதியில் அமைந்துள்ள அரசு கல்லுாரிகளுக்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும்' என்றார்.
