நகர வாய்க்கால்கள் முழுவதுமாக ஆய்வு துவக்கம்: முற்றிலுமாக மாற்றியமைக்க முடிவு
நகர வாய்க்கால்கள் முழுவதுமாக ஆய்வு துவக்கம்: முற்றிலுமாக மாற்றியமைக்க முடிவு
UPDATED : ஏப் 28, 2026 04:34 AM
ADDED : ஏப் 27, 2026 10:05 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகரம் முழுவதும் உள்ள வெள்ள வடிக்கால் வாய்க்களை மறு சீரமைப்பு செய்வதற்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்ற நகரங்களிலிருந்து தனித்துவமாகத் திகழச் செய்கிறது புதுச்சேரி நகர வடிவமைப்பு. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட இந்த நகரம், அழகிய தெருக்கள் மட்டுமல்லாது, கழிவுநீர் வடிகால் அமைப்புகளாலும் பெருமை கொண்டது. நகரம் முழுவதும் நேர்கோட்டில் அமைந்த சாலைகள் போலவே, வடிகால் வாய்க்கால்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் எவ்வளவு கனமழை பெய்தாலும், சில மணி நேரங்களுக்குள் தண்ணீர் வடிந்துவிடும் என்பது இந்த வடிகால் அமைப்புகளின் செயல் திறனை வெளிப்படுத்துகிறது. நகரின் முக்கிய வாய்க்கால்களாக உள்ள உப்பனாறு பெரிய வாய்க்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்கள், மழைக்காலங்களில் வெள்ளநீர் வடிகால்களாகவும், மற்ற காலங்களில் கழிவுநீர், சாக்கடை நீர் ஓடும் வழிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இது நகரின் நீர்வழி மேலாண்மையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கொண்டிருந்த முன்னோக்குச் சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வாய்க்கால்கள் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, வாய்க்கால்களின் கரைகள் பல இடங்களில் பலவீனமடைந்துள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுகின்றது.
இந்த பிரச்னைகளை தீர்க்கும் நோக்கில், தற்போது நகர பகுதியில் முழுமையான வடிகால் மறு சீரமைப்பு திட்டத்தை முன்னெடுக்கப்பட உள்ளது. அதற்காக நகரப் பகுதியில் உள்ள 16 முக்கிய வாய்க்கால்களும், கூடுதலாக உள்ள 8 சிறிய வாய்க்கால்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், வாய்க்கால்களின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகளை தூர்வாரி ஆழப்படுத்துதல், பலவீனமடைந்த கரைகளை பலப்படுத்துதல், கழிவுநீர் கசிவைத் தடுக்க புதிய பாதுகாப்பு அமைப்புகள் அமைத்தல், தண்ணீர் வெளியேற்றும் திறனை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பெரிய திட்டத்திற்கு நிதி உதவி கேட்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அணுகப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில் தேவையான நிதி ஒதுக்கீடு பெறப்பட உள்ளது. இந்த நிதி உதவி கிடைத்தால், புதுச்சேரியின் வடிகால் அமைப்பு மேலும் நவீனமயமாக்கப்படும்.
பிரெஞ்சு காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த நேர்த்தியான வடிகால் அமைப்புகள், இன்றைக்கும் புதுச்சேரியை வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை புதுப்பிக்கும் இந்த முயற்சி, நகரின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பு திட்டம் என்பதில் சந்தேகமில்லை.
