/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர்களை அகற்ற கலெக்டருக்கு உத்தரவு! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
/
பேனர்களை அகற்ற கலெக்டருக்கு உத்தரவு! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
பேனர்களை அகற்ற கலெக்டருக்கு உத்தரவு! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
பேனர்களை அகற்ற கலெக்டருக்கு உத்தரவு! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
ADDED : பிப் 10, 2024 06:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றமாவட்ட கலெக்டருக்கு, புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் புதுச்சேரியில் பேனர் தடை சட்டம், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டதால், நுாற்றுக்கும் மேற்பட்ட அனைத்து இடங்களிலும் தாறுமாறாக பேனர்கள் வைக்கப்படுகிறது.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் வகையில் சிக்னல்களில் மெகா சைஸ் பேனர்களும், சாலையோரம் வரிசையாக வரவேற்பு பேனர்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகிறது.
பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசார், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர், தடையை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.
இதனால் பிறந்த நாள், இரங்கல், திருமணம், காதணி விழா, கட்சி துவக்கம், கடை திறப்பு என எதற்கு எடுத்தாலும் பேனர் வைப்பது புதுச்சேரியின் பேஷனாகி விட்டது.
சாலைகள் முழுதும் காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார ஸ்தலமாக மாறிவிட்டதால், ஏற்கனவே புதுச்சேரி சாலைகள் டிராபிக் ஜாமில் சிக்கி தவித்து வருகின்றன.
ஆக்கிரமிப்பு கடைகள் போக மீதியுள்ள சிறிய சாலை பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்த சாலையிலும், கம்பு கள் நீட்டியபடி பேனர்களை கட்டி வைத்துள்ளனர்.
இந்த பேனர் எப்போது விழும், கம்புகளில் சிக்கி கிழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், முதலியார்பேட்டையில் திருமண வாழ்த்து பேனர் விழுந்து பைக்கில் சென்ற இருவர் காயமடைந்தனர். இதுபோல் ஏராளமான நிகழ்வுகள் புதுச்சேரியில் தினசரி நடக்கிறது.
பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தாலும், பேனர்கள் அகற்றப்படுவது இல்லை. போலீசாரும் வாய் மூடி, கை கட்டி மவுனம் காக்கின்றனர்.
பேனர் கலாசாரம் புதுச்சேரியின் சாபக்கேடு போல மாறி விட்டது. புதுச்சேரியின் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வந்த நீதிமன்றம் பேனர் விஷயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளது.
புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரமோகன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகல்களுடன், புதுச்சேரி கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1.10.2021 மற்றும் 28.4.2022 தேதி உத்தரவுகளின் கீழ், பொதுமக்கள் நடந்து செல்லும் சாலை, நடைபாதைகள், பொது சொத்துக்கள் மீது அனுமதியின்றி வைத்துள்ள பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், ஹோர்டிங்ஸ், அலங்கார வளைவு, கட்அவுட்கள், தட்டிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் முக்கிய சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், ஹோர்டிங்ஸ், அலங்கார வளைவுகள், கட்அவுட்கள், தட்டி பலகைகள் உள்ளன. இது உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.
எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், ஹோர்டிங்ஸ், ஆர்ச், கட்அவுட், விளம்பர தட்டி பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை மீறி பேனர் வைப்பதில் விதிமுறை மீறல்கள் கண்டறியிப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நகல், தலைமை செயலர், டி.ஜி.பி., பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், அரியாங்குப்பம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.