ஒருங்கிணைந்த போட்டி தேர்வு துவக்கம்: 112 மையங்களில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
ஒருங்கிணைந்த போட்டி தேர்வு துவக்கம்: 112 மையங்களில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : ஆக 20, 2026 10:01 PM
ADDED : ஆக 20, 2026 08:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் தேர்வு அமைப்பால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைக்கான பல்வேறு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 21ல் துவங்கி 23ம் வரை நடக்கிறது.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 112 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 40,000 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த போட்டி தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாளச் சான்றைக் கொண்டு வர வேண்டும்.
தேர்வர்களுக்குக் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மையத்தின் முதன்மை நுழைவு வாயில் மூடப்படும்.
கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே அனுமதிக்கப்படும். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல் துறை வழக்குப்பதிவு மற்றும் தேர்வெழுதத் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஹால் டிக்கெட்டை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சந்தேகங்களுக்கு 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
