ADDED : பிப் 01, 2026 05:20 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில் வர்த்தக உரிமத்தை வரும் 28ம் தேதிக்குள் பெற வேண்டுமென, ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், கள ஆய்வில் பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருகின்றன.
இது நகராட்சிகள் சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, நகராட்சி உரிமம் பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் வர்த்தகம் செய்பவர்கள் வரும் 28ம் தேதிக்குள் உழவர்கரை நகராட்சி வருவாய் பிரிவை அணுகி அல்லது இணையதளம் (www.lgrams.py.gov.in) வாயிலாக விண்ணப்பித்து நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வர்த்தக உரிமம் பெற வேண்டும்.
தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின் கீழ் வர்த்தக உரிமம் இல்லாமல் இயங்கி வரும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும், 28ம் தேதிக்குள் வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். தவறினால், கூடுதலாக 25 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
