ADDED : மார் 22, 2026 06:00 AM
பாகூர்: பாகூர் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில், இரண்டு பேர் வேட்பாளர்களாக வலம் வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் ஓட்டு பதிவு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், போட்டியிடுவது தொடர்பாக, என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., - ல.ஜ.க., ஆகிய கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து சுமூக முடிவு ஏற்பட்டது.
இக்கூட்டணி சார்பில், பாகூர் தொகுதி என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பாகூர் தொகுதியில் வேட்பாளராக வலம் வருகிறார். இதனிடையே, மற்றொரு புறம், ல.ஜ.க, ரீகன் ஜான்குமாரும், வேட்பாளராக வலம் வருகிறார். ஒரே கூட்டணிக்குள் இரண்டு பேர் வேட்பாளர்கள் பாகூரில் வலம் வருவதால், கூட்டணி கட்சிக்குள் சலசலப்பையும், பொது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு நேற்று முன்தினம் வரை ரீகன் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று எங்கும் செல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
