UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:26 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், காங்., வேட்பாளர் விநாயகம், கூட்டணி கட்சியினர் பைக்கில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேற்று இறுதி கட்ட வாகன பேரணி பிரசாரம் நடந்தது.
அதன்படி, பாக்கமுடையன்பேட் பகுதியில் துவங்கிய பேரணி கொட்டுப்பாளையம், புதுப்பேட்டை, மடுவுபேட், வினோபா நகர், பொய்யாக்குளம், திலகர் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம் வழியாக தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் பகுதிகளில் முடிவடைந்தது.
நேரு எம்.எல்.ஏ., காங்., தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று பைக்கில் பேரணியாக வீதி, வீதியாக சென்று ‘கை’ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
இதில் தொண்டர்கள் தங்களது பைக்குகளில் காங்., த.வெ.க., கொடிகளுடன் வலம் வந்தனர். பேரணியின் முன்பாக, 3 குதிரைகளில் த.வெ.க.,வினர் கொடியுடனும், மெகா சைஸ் கொரில்லா மற்றும் கரடி பொம்மைகளும் பங்கேற்றன.
