UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:27 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடைசி நாளான நேற்று என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து பைக் பேரணி நேற்று நடந்தது. திலகர் நகரில் துவங்கிய பேரணி பல்வேறு பகுதிகளை கடந்து, வினோபா நகர் பகுதியில் நிறைவடைந்தது.
பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வெங்கடேஸ்வரா நகர் வாய்க்கால் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த பணியை வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னேடுப்பார். புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் ஓரிரு ஆண்டுகளில், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் முக்கிய பொறுப்பு. நமது அரசு இளைஞர்களுக்கு அதிக அளவில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தட்டாஞ்சாவடி தொகுதி வளர்ச்சிக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். திட்டங்கள் நிறைவேற்ற அரசின் சார்பில் என்னால் நிதி ஒதுக்க முடியும். வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிப்பவர்களுக்கு மக்கள் ஓட்டு போட கூடாது.
அசோக் ஆனந்த் மக்கள் தேவைகளை அறிந்து அரசுடன் இணைந்து செயல்பட்டு, திட்டங்களை கொண்டு வரக்கூடிய சரியான வேட்பாளர் அசோக் ஆனந்த். அவர், வெற்றி பெற்றால், தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும், அரசின் துணையுடன் கொண்டு வர முடியும்.
எனவே மக்கள் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டுபோட்டு அசோக் ஆனந்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
