/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் காங்., மனு
/
பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் காங்., மனு
பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் காங்., மனு
பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் காங்., மனு
ADDED : பிப் 11, 2024 02:23 AM

புதுச்சேரி: ராகுலை அவமதித்த பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்., அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியை விமர்சித்த காங்., முன்னாள் தலைவர் ராகுலை கண்டித்து புதுச்சேரியில் பல இடங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இந்நிலையில் பா.ஜ.,வின் இச்செயலை கண்டித்து புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உள்ளிட்டோர் புதுச்சேரி காவல் துறை தலைமையகத்தில் டி.ஜி.பி., ஸ்ரீநிவாசிடம் புகார் மனு அளித்தனர்.
அப்போது, பா.ஜ.,வினர் போராட்டம் எனும் பெயரில் காங்., முன்னாள் தலைவர் ராகுலை அவமதித்துள்ளனர். அதேபோல, காங்., போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். எனவே, ராகுலை அவமதித்த பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு, டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் விதி மீறிச் செயல்படுவோர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
பின், காங்.,மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., நாராயணசாமி ஆகியோர் கூறுகையில், 'பிரதமர் மோடி எந்தப் பிரிவினர் என்பது குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியதற்கு பா.ஜ.,வினர் பதில் கூறலாம்.
போராட்டம் நடத்தலாம். அவரை அவமதிக்கும் வகையில் செயல்படுவது சரியல்ல. எனவே, பா.ஜ.,வினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்கவிட்டால் நாளை 12ம் தேதி காங்., போராட்டத்தில் ஈடுபடும்' என்றனர்.
இதனிடையே ராகுல் அவமதிக்கப்பட்டதை கண்டித்து காமராஜர் சாலை, ராஜா தியேட்டர், கிருமாம்பாக்கம், வில்லியனுார் பகுதிகளில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதித்தது.