/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணியில் இருந்து கழற்றிவிட காங் திட்டம்: தனித்து களம் காண தயாராகும் தி.மு.க.,
/
கூட்டணியில் இருந்து கழற்றிவிட காங் திட்டம்: தனித்து களம் காண தயாராகும் தி.மு.க.,
கூட்டணியில் இருந்து கழற்றிவிட காங் திட்டம்: தனித்து களம் காண தயாராகும் தி.மு.க.,
கூட்டணியில் இருந்து கழற்றிவிட காங் திட்டம்: தனித்து களம் காண தயாராகும் தி.மு.க.,
ADDED : ஜன 03, 2026 04:40 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணியில் இருந்து தி.மு.க.,வை கழற்றிவிட காங்., திட்டமிட்டுள்ளதால், பதிலடியாக தி.மு.க.,வும் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. பு
துச்சேரி, காங்., கட்சியின் கோட்டை. ஆறு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்.,கட்சி கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15வது சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை பறி கொடுத்தது. 2 தொகுதியில் மட்டுமே காங்., வெற்றிப் பெற்றது அந்த கட்சியிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில் தி.மு.க., 6 எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபையில் பலமானது. அப்போது இருந்தே கடந்த நான்கரை ஆண்டுகளாக இரு கட்சிகளிடையே உரசல் இருந்து வருகிறது. அதில்,
வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில், இண்டி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் தி.மு.க., - காங்., கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இம்முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். அதற்கான காய்களையும் நகர்த்தி வருகின்றனர்.
ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டு 'புதுச்சேரி எங்களின் கோட்டை' என நிரூபிக்க காய் நகர்த்துகிறது காங்கிரஸ். இப்படி ஆளுக்கொரு திட்டம் வைத்திருப்பதால் இரண்டு கட்சிகளுமே 30க்கு 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தங்களின் தலைமைக்கு ஊதும் சங்கினை ஊதி வைப்போம் என்று உரக்க சொல்லி வருகின்றன.
தி.மு.க.,வை கழற்றி விடலாமா... இந்த அரசியல் குழப்பத்திற்கு இடையே வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என காங்., மேலிடம் மாநில நிர்வாகிகளிடம் ரகசிய சர்வே எடுத்து வருகிறது. செல்லும் இடமெல்லாம் நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஆட்சியில் பங்கு என த.வெ.க., சொல்கின்றது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை கழற்றிவிட்டு த.வெ.க., கூட்டணி வைத்தால் என்ன என்று கேள்வியை முன் வைத்து இந்த சர்வே மாநில நிர்வாகிகளிடம் நடத்தப்படுகிறது.
தற்கொலைக்கு சமம் ஆனால், மூத்த காங்., தலைவர்கள் இந்த யோசனையை கடுமையாக நிராகரித்து வருகின்றனர். நடிகருக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டுகளாக மாறாது. தி.மு.க.,வை போன்று புதுச்சேரியில் த.வெ.க., கட்சிக்கு பலம் இல்லை. பூத் அளவில் கூட ஆட்கள் இல்லை. எனவே வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை முறித்து விட்டு வெளியேற தேவையில்லை என, மூத்த காங்., தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
விஜய் அலை நமக்கு சாதகமே... அதே நேரத்தில் காங்., கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் த.வெ.க., கூட்டணியை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பலம் நடிகர் விஜய்க்கு உள்ளது. குறிப்பாக பெண்கள் ஓட்டு விஜய்க்கு சாதகம். எங்கள் வீட்டில் கூட விஜய்க்கு தான் ஓட்டுபோடுவோம் என்கின்றனர். அந்த கட்சிக்கு ஒரே மைனஸ் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு அந்த கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. இதனை நமக்கு சாதகமாக்கி கொண்டு நாம் நடிகர் விஜய் ஆதரவுடன் பெரும்பாலான இடங்களில் போட்டியிடலாம். அதாவது 20 இடங்களில் காங்., நிற்கலாம். த.வெ.க.,விற்கு 10 தொகுதிகள் கொடுக்கலாம். அதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியை எளிதாக தனிப்பெரும்பான்மையும் கைப்பற்ற முடியும்.
தமிழகத்தில் தி.மு.க., பலம் என்றால், புதுச்சேரியில் காங்., கட்சி தான் பலம். ஆனால் செல்வாக்கு இல்லாத தி.மு.க., வை ரொம்ப காலத்திற்கு தோளில் சுமந்து ஓடிக்கொண்டு இருக்கிறோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தி.மு.க.,விடம் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறோம். இதனால் தான் காங்., கரைந்து கடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. தமிழக தி.மு.க., கூட்டணிக்காக புதுச்சேரி காங்., கட்சியை அடமானம் வைக்க தேவையில்லை. தி.மு.க., துாக்கி கொண்டாடியது போதும். தி.மு.க.,வை இறக்கிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சர்வேயில் குமுறி தள்ளி வருகின்றனர்.
தி.மு.க.,வும் அதிரடிக்கு ரெடி காங்., கட்சியின் திட்டத்திற்கு பதிலடி கொடுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, புதுச்சேரியில் மீண்டும் தி.மு.க., ஆட்சியை கொண்டு வர வேட்பாளர்களை தயார் செய்துள்ளது.
இதற்கான பணிகள் மாநில பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில், மாநில அமைப்பாளர் சிவா முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை இப்போதே களம் இறக்கிவிட்டது. அவர்களும் வீடு வீடாக சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாறும் கூட்டணி அரசியல் கணக்குகளால் புதுச்சேரி அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.

