ADDED : செப் 12, 2026 11:53 PM
புதுச்சேரி: முட்ராம்பட்டு– குமராப்பாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முட்ராம்பட்டு– குமராப்பாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, தமிழக அரசு மூலம் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேம்பாலம் பழுதடைந்து சேதமடைந்தது.
பழுதடைந்த மேம்பாலம் எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டதால், விபத்து ஏற்படுவதற்கு முன், அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலை துறை மூலம், கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு– புதுச்சேரி பகுதி, குமராபாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, பழுதடைந்த மேம்பாலம் அருகே, ரூ. 23.86 கோடி மதிப்பீட்டில், புதிய மேம்பாலம் கட்டுமானம், பழைய மேம்பாலத்தை புனரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. அதில், சங்கராபரணி ஆற்றில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவு, ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மழைக்காலம் துவங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
