ADDED : செப் 12, 2026 10:32 PM
புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் கழிவுநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் அரியாங்குப்பம்– வீராம்பட்டினம் வரை, சாலை அகலப்படுத்துதல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், வீராம்பட்டினம், எம்.ஜி.ஆர். நகர், பவானி நகர் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் சரியாக அமைக்கப்படாததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி அப்பகுதி சாலையில் தேங்கியது. இதனால், அப்பகுதியில், துார்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு அரியாங்குப்பம்– வீராம்பட்டினம் செல்லும் சாலையில் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன், அரியாங்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், எம்.ஜி.ஆர். நகர், பவானி நகர் பகுதிகளில் தேங்கிய கழிவுநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், இனி கழிவுநீர் தேங்காத வகையில் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அரியாங்குப்பம்– வீராம்பட்டினம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
