/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டட தொழிலாளி சாவு போலீஸ் நிலையம் முற்றுகை
/
கட்டட தொழிலாளி சாவு போலீஸ் நிலையம் முற்றுகை
ADDED : ஜன 19, 2026 04:55 AM

புதுச்சேரி: கட்டட தொழிலாளி இறப்பிற்கு உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
லாஸ்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; கட்டட தொழிலாளி. அவர் கடந்த இரண்டு மாதங்களாக அதே பகுதியில், வேல்முருகன் என்பவர் கட்டிவரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என, வேல்முருகன் மொபைல் மூலம் அழைத்ததின் பேரில், ராஜேந்திரன் சென்றார்.
இந்நிலையில், மாலை 4:30 மணியளவில் ராஜேந்திரன் கட்டடத்தில் இருந்து கிழே விழுந்து, இறந்து விட்டதாக, வேல்முருகன் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவரது மனைவி அங்கு சென்று விசாரித்தபோது, ராஜேந்திரன் மதியம் 12:30 மணிக்கே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, முதலுதவி அளிக்காமல், காலதாமதம் செய்ததால் ராஜேந்திரன் இறந்து விட்டதாக கூறி, வேல்முருகன், 59; சரண்ராஜ், 29, ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜேந்திரன் மனைவி அலமேலு லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதனிடையே நேற்று காலை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த அலமேலு மற்றும் உறவினர்களுடன் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு,குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துக் கோரி, போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்களிடம் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொ) பாலமுருகன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

