'நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு:ஓரிரு தினங்களில் ஆணை வெளியாகிறது
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு:ஓரிரு தினங்களில் ஆணை வெளியாகிறது
UPDATED : ஆக 12, 2026 10:46 PM
ADDED : ஆக 12, 2026 08:02 PM

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு ஓரிரு தினங்களில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட உள்ளதால் மாணவர்கள் அனைவரும் தங்களது சான்றிதழ்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
சென்டாக் பி.டெக்., கலை அறிவியல் உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளை பொருத்தவரை சென்டாக்கிற்கு மொத்தம் 12,288 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி மாணவர்கள் 10,540 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ஒதுக்கீட்டிற்கு 1,518, கிராமப்புற ஒதுக்கீடு 776, ஜே.இ.இ மூலம் 1,810 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்ப விநியோகம் முடிவுற்ற நிலையில், சென்டாக் நிர்வாகம் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்து, மெரிட் பட்டியல், வரைவு இட ஒதுக்கீடு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் ஓரிரு தினங்களில் முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்க உள்ளது.
5 ஆண்டு சட்டப்படிப்பு:: இந்தாண்டு சில தொழில்முறைப் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அசுரத்தனமான போட்டி நிலவுவது தெளிவாகிறது. மிகவும் வியப்பளிக்கும் அம்சமாக சட்ட படிப்பு இடம் பெற்றுள்ளது. 5 ஆண்டு படிப்பில் வெறும் 67 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 1,490 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு இடத்தைப் பிடிக்க 22.24 மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இது அனைத்துப் பிரிவுகளையும் விட உச்சகட்ட போட்டியாக உருவெடுத்துள்ளது.
அக்ரி-தோட்டக்கலை:: வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பஜன்கோ, மணக்குள விநாயகர் ஆகிய கல்லுாரிகளில் உள்ள 330 அக்ரி இடங்களுக்கு 1,538 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு இடத்திற்குச் சுமார் 4.66 மாணவர்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
பி.வி.எஸ்சி.: கால்நடை மருத்துவம், பி.எஸ்சி செவிலியர், பி.பி.டி உள்ளிட்ட பாரா மெடிக்கல் படிப்புகளுக்காக உள்ள 1,754 இடங்களுக்கு 3,586 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இப் பிரிவில் ஒரு இடத்திற்கு 2.04 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
கலை அறிவியல்:: அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்ட கலை மற்றும் அறிவியல் பிரிவில் 4,280 இடங்களுக்கு 5,847 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இங்கு ஒரு இடத்திற்கு 1.37 மாணவர்கள் என்ற அளவில் போட்டி நிலவுகிறது.
பொறியியல் படிப்புகள்:: பி.டெக்., படிப்புகளுக்கான 3,660 இடங்களுக்கு 4,985 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இங்கும் ஒரு இடத்திற்கு 1.36 மாணவர்கள் என்ற விகிதத்தில் சேர்க்கைக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வு கவுன்சிலில் முடிவுகள் சேர்க்கை ஆணையுடன் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளதால், மாணவர்கள் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சேர்க்கை ஒதுக்கீடு ஆணை கிடைத்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய கல்லுாரிகளில் நேரில் ஆஜராகி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
