சீறிப்பாயும் வேகம்… இலக்கில் துல்லியம் உலக சாதனை படைத்த புதுச்சேரி சுட்டி புயல் ஷஷி
சீறிப்பாயும் வேகம்… இலக்கில் துல்லியம் உலக சாதனை படைத்த புதுச்சேரி சுட்டி புயல் ஷஷி
ADDED : ஆக 12, 2026 07:11 PM

புதுச்சேரி: சிலருக்கு ஸ்கேட்டிங் வசப்படும், சிலருக்கு வில்வித்தை கைக்கூடும். ஆனால், இரண்டுமே என் இரண்டு கண்கள் என இரண்டையும் ஒரே நேரத்தில் கச்சிதமாக இணைத்து உலக சாதனை படைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சுட்டிப் பெண் ஷஷி சுரேந்திர குமார்.
மூலக்குளத்தில் உள்ள பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் அகாடமியில் 5-ம் வகுப்பு படிக்கும் இந்தச் குட்டிப் புயல், சமீபத்தில் விருத்தாசலம் - சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.டி. ஸ்போர்ட்ஸ் அரேனாவில் நிகழ்த்திக்காட்டிய சாதனை, பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது..
தடதடவென ரோலர் ஸ்கேட்டிங்கில் சக்கரங்கள் சுழல, உடலை பேலன்ஸ் செய்தபடியே 10 மீட்டர் துாரத்தில் உள்ள இலக்கை நோக்கி, சுளீர் சுளீரென 100 அம்புகளை எய்து இலக்கை துல்லியமாகத் தாக்கியிருக்கிறார்.
துரோணா ஷூட்டிங் அகாடமி வழிகாட்டுதலில் உருவான இந்த அரிய சாதனைக்கு, ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் அமைப்பு அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கி, உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறது. அடுத்து கின்னஸ் சாதனைக்காக தீவிர பிராக்டீஸில் இருந்த குட்டி தேவதையிடம் பேச்சு கொடுத்தோம்.
மழலை மாறாத, அதேசமயம் தன்னம்பிக்கை ததும்பும் குரலில் உற்சாகமாக பேச துவங்கினார்.
கடந்த ரெண்டு வருஷமா ரோலர் ஸ்கேட்டிங், ஆர்ச்சரி ரெண்டையும் தனித்தனியா கத்துக்கிட்டு இருந்தேன். போகப் போக ரெண்டு மேலயும் ஆர்வம் ஜாஸ்தியாகிடுச்சு. அந்த நேரத்துலத்தான் என்னோட ஆர்ச்சரி கோச் பிரவீன் ஜோஸ், ஏன் இது ரெண்டையும் ஒரே நேரத்துல பண்ணி உலக சாதனை படைக்கக் கூடாதுன்னு ஒரு விதையைப் போட்டாரு. எனக்குள்ளயும் ஒரு ஸ்பார்க் வந்துச்சு...
சரி, ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்னு களத்துல இறங்கிட்டேன். கடந்த 6 மாசமா எடுத்த தீவிர பயிற்சிதான் இது. இன்னைக்கு இந்த உழைப்பு உலக சாதனையா மாறியிருக்கிறது நினைச்சா செம்ம ஹாப்பியா இருக்கு...
இந்த வெற்றிக்கு பின்னணி யாரு?: இந்த பிரம்மாண்ட சாதனைக்கு பின்னாடி நிறைய பேர் இருக்காங்க. முக்கியமா என்னோட அப்பா சுரேந்திர குமார் - அம்மா மகேஸ்வரி. ரெண்டு பேருமே டாக்டர்கள். என்னோட ஆர்வத்தைப் பார்த்து சின்ன வயசுலயே ரெண்டுலயும் சேர்த்துவிட்டாங்க. அப்புறம் என்னோட ஸ்கூல், கோச்சஸ் எல்லாரும் எனக்குப் பெரிய பலமா இருந்தாங்க. இவங்க இல்லன்னா இந்த சாதனை கண்டிப்பா சாத்தியமாகி இருக்காது.
ரெண்டு வெவ்வேற விளையாட்டை ஒரே நேரத்துல எப்படி ஹேண்டில் பண்றீங்க...
ரெண்டையும் தனித்தனியா மனசுக்குள்ள போகஸ் பண்ணுவேன். ஆர்வம், விடாமுயற்சி இருந்தா எத்தனை விளையாட்டா இருந்தாலும் அசால்ட்டா சாதிக்கலாம்.
உங்களோட பிளஸ் பாயிண்ட் என்ன?: துல்லியம், வேகம்... இது ரெண்டும் தான் என்னோட பவர். இதுல நான் நோ காம்ப்ரமைஸ். அதுதான் என்னை இன்னைக்கு உலக சாதனை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.
அடுத்த டார்கெட் என்ன...: ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் முடிஞ்சாச்சு... அடுத்து கின்னஸ் சாதனையைப் தட்டித்துாக்கப்போறேன். அதுக்கான தீவிர பயிற்சியிலதான் இருக்கேன். கண்டிப்பா சாதிப்பேன் என்று சுட்டித்தனமாகக் கண் சிமிட்டி, புன்னகைத்தபடி மீண்டும் மின்னலாக ஸ்கேட்டிங் களத்திற்குள் பாய்ந்தார் இந்தச் சுட்டி சாம்பியன்..
