ADDED : செப் 26, 2026 11:04 PM
புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதி, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரிக்கு, தங்களது உடலை தானம் செய்து, ஒப்புதலை வழங்கி உள்ளனர்.
அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வாழுமுனி 70; ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., ஊழியர். இவரது மனைவி புஷ்பா 62; இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
உடல் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வாழுமுனி, அவரது மனைவி புஷ்பா இருவரும், தங்களது உடலை, அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட முடிவு செய்தனர்.
அதன்படி, தம்பதியர் தங்களது பிள்ளைகளின் ஒப்புதலோடு, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், உடற் கூறியல் துறையை அணுகினர்.
துறை தலைவர் டாக்டர் அருணா வழிகாட்டுதலின் படி, அதற்கான உறுதி மொழி படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து, தங்களது உடலை தானமாக வழங்கிட ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
உடல் கூறியல் துறை சார்பில், தம்பதியருக்கு உடல் தானம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வாழுமுனி கூறுகையில் ‘சிறுவயது முதலே பொது சேவையில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினரிடம் கலந்து பேசி, இறந்தவர்களின் கண்களை தானமாக வழங்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நாம் உயிரோடு இருந்தாலும், இல்லா விட்டாலும் பயன்னுள்ள வகையில் இருக்க வேண்டும்.
அதற்காக தான், நானும், எனது மனைவியும் தற்போது உடல் தானமும் மற்றும் கண் தானமும் செய்துள்ளோம்’ என்றார்.
