/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 ஆண்டாக அரசு கட்டணம் செலுத்தாததால் சிக்கல்
/
3 ஆண்டாக அரசு கட்டணம் செலுத்தாததால் சிக்கல்
UPDATED : மே 21, 2025 07:41 AM
ADDED : மே 21, 2025 05:09 AM

புதுச்சேரி: சென்டாக் மூலம் தனியார் கல்லுாரிகளில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாகஅரசு காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.
இதனால், கல்வி நிறுவனங்கள் கட்டணத்தைசெலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருவதால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.சென்டாக் கல்வி உதவித்தொகை கிடைக்காததால்...
மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெற்று வருகிறது.
இதில், தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு காமராஜர் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தி வருகிறது.
அதில், மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.2.25 லட்சமும், கால்நடை மருத்துவம், பொறியியல், நர்சிங் மற்றும் வேளாண் பட்ட படிப்பு மாணவர்களுக்கு முறையே ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது.
மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காமராஜர் கல்வி உதவித் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வந்த அரசு என்ன காரணத்தினாலோ கடந்த 2022-2023 கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறது.
இதனால், கடந்த மூன்றாண்டுகளாக, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத் தொகை அரசிடம் இருந்து கிடைக்காததால் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் தற்போது கட்டணத்தை செலுத்திவிடுங்கள். அரசு செலுத்தியதும் தொகையை திருப்பி தந்துவிடுவதாக மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதனால், காமராஜர் கல்வி நிதி உதவித் தொகையை நம்பி அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லுாரிகளில் உயர் படிப்பில் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக மருத்துவக் கல்லுாரிகளில் கடந்த 2022-23 கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் தற்போது மூன்று கல்வி ஆண்டிற்கான கட்டணம் ரூ.6.75 லட்சமும், பிற தொழில் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் ரூ.75 ஆயிரத்தை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே அரசு, கடந்த மூன்றாண்டுகளாக வழங்காமல் உள்ள காமராஜர் கல்வி உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.