ADDED : ஏப் 06, 2025 05:53 AM

புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லுாரியில், மாணவர்களின் திறனாய்வு திறமைகளை கண்டறியும் வகையில், தேசிய அளவிலான வணிக திறன் போட்டி (சினெர்ஜி) நடந்தது.
புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில், துறை தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாபு விழாவை, துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் தங்களது வணிக திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, பேசினார்.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஜோஸ்பின் சகாயராணி வணிக, பொருளாதார திறன் மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, கல்லுாரி துணைத் தலைவர் பழனிராஜா சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கவுதம் நன்றி கூறினார்.

