தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தங்க புதையல் மோசடி வழக்கில் கடலுார் நபர் கைது; 15 பேருக்கு வலை

தங்க புதையல் மோசடி வழக்கில் கடலுார் நபர் கைது; 15 பேருக்கு வலை

தங்க புதையல் மோசடி வழக்கில் கடலுார் நபர் கைது; 15 பேருக்கு வலை


ADDED : செப் 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே தங்க புதையல் உள்ளதாக கூறி துாத்துக்குடி வியாபாரிடம் 20 லட்சம் பணம் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ, 34. எட்டயபுரம் மெயின் ரோடு, ஓம்சக்தி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 21ம் தேதி அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், முன்பே பழகியது போல மொபைல் போனில் பேசி, தான் செஞ்சியில் கட்டுமான வேலைக்கு பள்ளம் எடுத்த போது 6 கிலோ தங்க புதையல்  கிடைத்துள்ளது. படிப்பறிவு இல்லாததால், அதனை யாரிடம் விற்பது என, தெரியவில்லை. நீங்கள் புதையலை விற்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டு, வாட்ஸ் ஆப் மூலம் புதையல் தங்க காசுகளை போட்டோ எடுத்து ராஜிக்கு அனுப்பி வைத்தார்.

தங்க புதையலை பார்க்க வேண்டும் என, ராஜி கேட்டார். மர்ம நபர் தான் புதுச்சேரியில் வேலை செய்து வருவதாகவும்,  இங்கு வந்தால் காட்டுவதாக தெரிவித்தார். அதனை நம்பி கடந்த 24ம் தேதி வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்த ராஜி, அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர்,  பையில் வைத்திருந்த தங்க காசுகளை காட்டி, அதில் இருந்து ஒரு காசு எடுத்து கொடுத்தார்.

ராஜி வாங்கிச் சென்ற தங்க காசை பரிசோதித்தபோது அது ஒரிஜினல் தங்கம் என உறுதியானது. அதனை தொடர்ந்து மொபைல் போனிலேயே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக ரூ. 20 லட்சம் கொடுப்பதாக ராஜி தெரிவித்தார்.

பின், புதையலை வாங்க, ராஜி தனது வீட்டில் வைத்திருந்த நகைகளை அடகு வைத்து ரூ. 20 லட்சம் பணத்துடன் கடந்த 30ம் தேதி மர்ம நபர்கள் கூறிய அதே தொண்டமாநத்தம் கோவில் பகுதிக்கு நண்பருடன் வந்து, 20 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு பையில் மறைத்து வைத்திருந்த தங்க புதையல் பானையை பெற்றுக்கொண்டு, காரில் ஏறி சிறிது துாரம் சென்ற நிலையில் புதையலை பிரித்து பார்த்தபோது பானையில் பித்தளை காசுகள் மற்றும் கலிமண் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவர், வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக கடலுார் முதுநகர் பகுதியில் உள்ள கொடிக்கால்குப்பத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ், 49, என்பவரை கைது  செய்து, அவரிடம் இருந்த 6 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 

சுரேஷ் கொடுத்த தகவலில் பேரில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாலியான பத்துக்கண்ணு அருகே உள்ள தமிழக பகுதியான அம்மனங்குப்பம் தர்மலிங்கம், அவரது மனைவி ரேணுகா, வளர்ப்பு மகன் வெங்கடேசன், மகள் தரணி, சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மகன் ராம்குமார் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us