/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் டிரேடிங்கில் 5 பேர் ரூ.3 கோடி இழப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
ஆன்லைன் டிரேடிங்கில் 5 பேர் ரூ.3 கோடி இழப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஆன்லைன் டிரேடிங்கில் 5 பேர் ரூ.3 கோடி இழப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஆன்லைன் டிரேடிங்கில் 5 பேர் ரூ.3 கோடி இழப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 28, 2025 01:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து 5 பேர் ரூ.3 கோடி இழந்துள்ளதால், சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ேஷர் மார்க்கெட் டிரேடிங் மூலம் அதிக லாபத்தை பெற்று தருகிறோம் என பல விளம்பரங்கள் உலா வந்து கொண்டிருகிறது. மேலும், ஏஐ., தொழில்நுட்பத்தைக் கொண்டு பங்குகள் வாங்கவும், விற்கவும் ஏ.ஐ. செயலி ஏற்பாடு செய்து தரப்படும் என்ற விளம்பரமும் பரவி வருகிறது.
இதை உண்மை என நம்பி அவர்களை தொடர்பு கொண்டால் முதலில், மர்மநபர்கள் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைக்கின்றனர். பின், அந்தக் குழுக்களில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என கற்றுக் கொடுகின்றனர். குழுவில் உள்ள சிலர் பல லட்சங்கள் லாபம் பெற்றுள்ளதாக பதிவிடுகின்றனர்.
அதனை உண்மை என நம்பி அதிக பணத்தை முதலீடு செய்கின்றனர். பின்னர், சில நாட்களில் அந்த வாட்ஸ் ஆப் குழுக்களை கலைத்து விடுகின்றனர். முதலீடு செய்தவர்கள் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல், அப்போதுதான் சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவருகிறது.
இதேபோன்று மோசடி கும்பல் உருவாக்கிய ஏ.ஐ., ரோபோட் வாங்கினால், அதுவே பங்குகளை வாங்கவும், விற்கவும் முடிவு செய்து கொள்ளும் என்று ஆசை வார்த்தை கூறியும் முதலீடு செய்யும்படி கூறுகின்றனர். அதை நம்பி பணத்தை முதலீடு செய்த பின், மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.
இதுபோன்று கடந்த வாரத்தில் மட்டும் மூன்று கோடி பணத்தை இழந்துள்ளதாக 5 பேர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.
ஆகையால், சமூக வலைதளங்களில் வரும் ஷேர் மார்க்கெட் டிரேடிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம். அதேபோன்று ஏ.ஐ., செயலி மூலம் பங்குகள் வாங்க விற்க என்று விளம்பரப்படுத்தினால் அதையும் நம்ப வேண்டாம். மேலும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (எஸ்.இ.பி.ஐ) அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி இணையதளம் மூலம் உங்களுடைய டிமேட் கணக்கு மூலமாக ேஷர் மார்க்கெட் டிரேடிங் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை உண்மை தன்மை அறியாமல் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்க சைபர் போலீஸ் நிலையத்தின் 1930, 0413-2276144, 9489205246 மற்றும் மின்னஞ்சல் cybercell-police@py.gov.in. இணையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.