/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதாள சாக்கடையில் மருத்துவ கழிவு கலப்பதால் பாதிப்பு! சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிப்போர் அவதி
/
பாதாள சாக்கடையில் மருத்துவ கழிவு கலப்பதால் பாதிப்பு! சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிப்போர் அவதி
பாதாள சாக்கடையில் மருத்துவ கழிவு கலப்பதால் பாதிப்பு! சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிப்போர் அவதி
பாதாள சாக்கடையில் மருத்துவ கழிவு கலப்பதால் பாதிப்பு! சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிப்போர் அவதி
ADDED : மே 29, 2024 05:28 AM

புதுச்சேரி : பாதாள சாக்கடையில் மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுகிறது. இதனால், கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிப்போர் கடும் அவதியடைகின்றனர்.
புதுச்சேரியில் 3 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. திலாஸ்பேட்டை கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, மூலக்குளம் ஜெ.ஜெ. நகர், கம்பன் நகர், இந்திரா சிக்னல் வரையிலும், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, கதிர்காமம், தட்டாஞ்சாவடி வரையிலான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.
தினசரி 17 எம்.எல்.டி., அளவு கழிவுநீரை திட கழிவுகள் தனியாகவும், சுத்திகரித்த தண்ணீர் தனியாக பிரிக்கின்றனர். பாதி அளவு சுத்திகரித்த நீர் புதுநகர் வாய்க்கால் வழியாக வெளியேறுகிறது. இது மூகாம்பிகை நகர், வேல் நகர், அஜிஸ் நகர், விவேகானந்தா நகர், இந்திரா சிக்னல் வழியாக உப்பனாறு வாய்க்காலில் கலக்கப்படுகிறது.
சுத்திகரிப்பு நிலையம் குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ளதால், அதிலிருந்து வெளியேறும் கடுமையான துர்நாற்றம், இறைச்சல் சத்தத்தால், மூகாம்பிகை நகர், வேல் நகர், புதுநகர், சத்யசாய் நகர், அஜிஸ் நகர், துாயதம்பி கார்டன், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், பெருமாள்ராஜா கார்டன், தட்சணாமூர்த்தி நகர் பகுதி மக்கள் கடும் பாதிப்பு அடைகின்றனர்.
குழந்தைகள், முதியோர்களுக்கு சுவாச பிரச்னை, தோல் நோய்கள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் அதிக துர்நாற்றத்தால் துாங்க முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ கழிவுகள் கடந்த காலத்தில் கனகன் ஏரியில் விடப்பட்டது. ஏரி மீன்கள் செத்து மிதந்தால் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டது.
மருத்துவ கல்லுாரி விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், ஒட்டுமொத்த கல்லுாரியில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகள் அனைத்தும் தொட்டியில் சேகரித்து அங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாக அனுப்புகின்றனர்.
தவிர மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பல தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை. தொழிற்சாலை கழிவுநீர் நேரடியாக பாதாள சாக்கடையில் இணைத்து விடுகின்றனர். இரவு நேரங்களில் பாதாள சாக்கடையில் தொழிற்சாலை கழிவுகளும், மருத்துவ கல்லுாரி கழிவுகள் திறந்து விடுவதால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கழிவுநீரை சுத்திகரிக்க முடியாமல் திணறுகிறது. அப்போது, கடும் துர்நாற்றம் எழுவதுடன், இயந்திரத்தின் இரைச்சல் சத்தமும் அதிகமாக உள்ளது.
பொதுப்பணித்துறைக்கு கடிதம்: கழிவுநீர் சுத்திகரிக்கும் தனியார் நிறுவனம், பாதாள சாக்கடை வழியாக மருத்துவ கழிவு, தொழிற்சாலை கழிவு சேர்ந்து ஆயில், கிரிஸ் அளவுக்கு அதிகமாக வருவதாகவும் தங்களால் இவற்றை சுத்தம் செய்ய முடியவில்லை. தொடர்ந்து இதுபோல் அத்துமீறி கழிவுகள் வெளியேற்றினால் தங்களால் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ள முடியாது என பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பியும் தடுக்கப்படவில்லை.
இ.டி.பி., இல்லாத மருத்துவ கல்லுாரி: மருத்துவ கல்லுாரிகள் அனைத்தும் மருத்து கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் இதுவரை மருத்துவ கழிவுநீர் சுத்திகரிப்பு (இ.டி.பி.) நிலையம் அமைக்கப்படவில்லை. நேரடியாக கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்திற்கே அனுப்படுகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கூறுகையில், 'பல ஆண்டுகள் சேமித்த பணத்தில் இப்பகுதியில் வீடு கட்டி குடியேறினோம். கடும் துர்நாற்றம், மூச்சு திணறல், சுகாதார சீர்கேட்டால், வீடுகளை விற்று விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டோம்.
முதல்வரிடம் தெரிவித்தபோது, உடனடியாக துறை அமைச்சர், அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்தார். ஆனால் சில நாட்களில் மீண்டும் துர்நாற்றம் வீச துவங்கி விட்டது. கல்லுாரியில் மருத்துவ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுடன், தொழிற்சாலை கழிவுகள் பாதாள சாக்கடையில் கலக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், மறியல் போராட்டத்துடன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுவோம்' என்றனர்.