தடுப்பணையின் கரைப்பகுதி சாலை சேதம்: விவசாயிகள் அவதி
தடுப்பணையின் கரைப்பகுதி சாலை சேதம்: விவசாயிகள் அவதி
ADDED : செப் 14, 2026 06:03 PM
புதுச்சேரி: செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கரைப்பகுதி சாலை சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் 6 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டு, தற்போது தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விவசாயிகள் பயன்பாட்டிற்காக தடுப்பணை ஓட்டி செட்டிப்பட்டில் இருந்து மணலிப்பட்டு மேம்பாலம் வரையில், ஆற்றின் கரைப்பகுதியில் மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, கரைப்பகுதியில் போடப்பட்ட சாலை, மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. அதனை சரிசெய்ய அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரையில் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால், வரும் மழைக்காலத்தில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள், உடனடியாக செட்டிப்பட்டு தடுப்பணை பகுதி கரையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து, கரையை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
