ADDED : ஏப் 17, 2026 07:06 PM
அரியாங்குப்பம்: தென்னை மட்டை விழுந்தது தொடர்பாக ஏற்பட்டபிரச்னையில் கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம், காக்காயந்தோப்பை சேர்ந்தவர் நடராஜன், 43. இவரது வீட்டு தென்னை மரத்தின் மட்டை பக்கத்து வீட்டை சேர்ந்த அப்பு (எ) மணிகண்டன் என்பவர் இடத்தில், கடந்த ஆண்டு ஏப்., 4ம் தேதி விழுந்தது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் இவரது ஆதரவாளர்கள் உட்பட 10 பேர் சேர்ந்து நடராஜன், அவரது மனைவி அனிதா ஆகியோரை அவதுாறாக பேசி, கத்தியை காட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, அனிதா புதுச்சேரி நீதிமன்றம் - 3ல் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து, மணிகண்டன் உட்பட 10 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து, அனைவரையும் தேடி வருகின்றனர்.
