/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலுக்கு தேவையான காவிரி நீரை கேட்க முடிவு: மழைக்காலத்தில் அதிக தண்ணீரால் பயனில்லை
/
காரைக்காலுக்கு தேவையான காவிரி நீரை கேட்க முடிவு: மழைக்காலத்தில் அதிக தண்ணீரால் பயனில்லை
காரைக்காலுக்கு தேவையான காவிரி நீரை கேட்க முடிவு: மழைக்காலத்தில் அதிக தண்ணீரால் பயனில்லை
காரைக்காலுக்கு தேவையான காவிரி நீரை கேட்க முடிவு: மழைக்காலத்தில் அதிக தண்ணீரால் பயனில்லை
ADDED : மே 17, 2024 05:27 AM

புதுச்சேரி: டில்லியில் வரும் 21ம் தேதி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காரைக்காலுக்கு அந்தந்த மாதத்திற்கான டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட வேண்டும் என, புதுச்சேரி மாநிலம் சார்பில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பிராந்தியம், விவசாயத்திற்கு காவிரி நதியை சார்ந்துள்ளதால், 7 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை அரசலாறு, நண்டலாறு, நாட்டாறு, நுாலாறு, புரவதயனார் ஆறு, திருமலைராஜன் ஆறு, வாஞ்சியாறு வழியாக காரைக்கால் பிராந்தியம் பெற்று, 27,121 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.
அதிகபட்சமாக, காரைக்காலில் 16 கி.மீ., தொலைவு கடந்து செல்லும் நுாலாறு மூலம் 9,301 ஏக்கர் பரப்பளவிலும், 10 கி.மீ.,கடந்து செல்லும் திருமலைராஜன் ஆற்றின் மூலம் 5,818 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறுகிறது.
கடந்த காலங்களை ஒப்பிடும்போது 2018-19ம் ஆண்டில்-6.142 டி.எம்.சி., தண்ணீர் வந்தது. அதன் பிறகு பருவமழை கைகொடுத்ததால் 2019-20ம் ஆண்டில்-11.897 டி.எம்.சி., 2020-21ம் ஆண்டில் 20.827 டி.எம்.சி., 2021-22ம் ஆண்டில் 21.269 டி.எம்.சி., 2022-23ம் ஆண்டில் 22.819 டி.எம்.சி., தண்ணீர் காரைக்காலுக்கு வந்தது.
ஆனால், கடந்தாண்டு 6.805 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே காரைக்காலுக்கு வந்தது. ஜூலை முதல் அக்டோபர் வரை 4.30 டி.எம்.சி., தண்ணீர் காரைக்காலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 1.026 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வந்தது. 3.274 டி.எம்.சி., பற்றாக்குறை ஏற்பட்டது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் 2.70 டி.எம்.சி., தண்ணீர் வர வேண்டும். ஆனால் 5.779 டி.எம்.சி., தண்ணீர் வந்தது. கூடுதலாக 3.079 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்தது. இதனால் எந்த பலனும் காரைக்கால் விவசாயிகளுக்கு ஏற்படவில்லை. மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக வந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
இதற்கிடையில் நீர் வழங்குவதற்கான தவணைக்காலம் இம்மாதம் 31ம் தேதி முடிகின்ற சூழ்நிலையில் வரும் 21ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்னும் அமலில் உள்ள சூழ்நிலையில் புதுச்சேரி அதிகாரிகள் காணொலி மூலமாக கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் அந்தந்த மாதத்திற்கான டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட வேண்டும் என, புதுச்சேரி மாநிலம் சார்பில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பயிர்சாகுபடி செய்ய முக்கி காலக்கட்டமாக உள்ளது. ஆகஸ்ட்டில் 1.050 டி.எம்.சி., செப்டம்பரில்-1.400 டி.எம்.சி., அக்டோபரில்-1.600, நவம்பரில்-1.400 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.
ஆனால் இந்த மாதங்களில் தான் குறைவாக அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் பயிர் சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
அதே வேளையில் காரைக்காலில் மழை பொழிவு இருக்கும் மாதங்களில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் காரைக்கால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே அந்தந்த மாதத்திற்குரிய தண்ணீரை புதுச்சேரிக்கு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

