பொறியியல் படிப்புகளில் ஆர்வம் குறைகிறது: ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு மவுசு
பொறியியல் படிப்புகளில் ஆர்வம் குறைகிறது: ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு மவுசு
ADDED : நவ 17, 2026 10:29 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த ஆண்டு பி.டெக்., மாணவர் சேர்க்கையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்த போதிலும், மாணவர் சேர்க்கை விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.
நீட் தேர்வு இல்லாமல் சேர்க்கை நடைபெறும் பி.டெக். படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் நிலவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் சென்டாக் ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 3,739 இடங்கள் இருந்தன. இதில் இறுதிச்சுற்று முடிவில் 2,954 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 785 இடங்கள் காலியாக இருந்தன.
அதன்படி, கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விகிதம் 79.01 சதவீதமாகவும், காலியிடங்களின் விகிதம் 20.99 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு 2026-ம் ஆண்டில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் மற்றும் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, மொத்த இடங்களின் எண்ணிக்கை 18 அதிகரித்து 3,757 ஆக உயர்ந்தது.
இடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மாப்-அப் கலந்தாய்வு சுற்று நிறைவில் 2,844 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 110 மாணவர்கள் குறைவாகவே பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு 785 ஆக இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில் 913 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இடங்களில் 24.30 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தும், மாணவர் சேர்க்கை குறைந்திருப்பது பொறியியல் கல்வித்துறையில் கவனிக்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
மாறிய மாணவர்களின் விருப்பம்: கடந்த இரண்டு ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்வதில் மாணவர்களின் விருப்பம் பெருமளவில் மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தரவு அறிவியல், இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) போன்ற நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகளையே மாணவர்கள் அதிகளவில் விரும்பித் தேர்வு செய்கின்றனர்.
வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே வேளையில், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற பாரம்பரியப் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பல கல்லுாரிகளில் இப்பாடப்பிரிவுகளுக்கான பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, புதுச்சேரியில் இந்த ஆண்டு சென்டாக் பி.டெக்., கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை விகிதம் சரிவடைந்துள்ளது. ஒருபுறம் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மறுபுறம் அடிப்படைப் பொறியியல் பாடப்பிரிவுகளிலும், சில தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. பொறியியல் கல்வியில் மாணவர்களின் விருப்பத் தேர்வு மாறிவரும் நிலையில், பாரம்பரியப் பொறியியல் பாடப்பிரிவுகளின் எதிர்காலம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
