ADDED : செப் 20, 2026 05:42 AM
புதுச்சேரி: உப்பனாறு கால்வாயை துார்வார வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பியுள்ள மனு:
காலநிலை மாற்றங்கள், கணிக்க முடியாத பருவ மழை பொழிவு மற் றும் கடல் அலைகளின் சீற்றம் காரணமாக உருளையான்பேட், சாரம், பிருந்தாவனம், சாந்தி நகர், வெங்கடா நகர், ரெயின்போ நகர், கோசப்பாளையம், உப்பளம், வானரப்பேட்டை, துப்ராயப்பேட்டை மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட முக்கிய குடியிருப்பு மற்றும் கல்விப் பகுதிகள் தொடர்ந்து கடுமையான வெள்ளப் பெருக்காலும், கடல் பின்னோக்கிப் பாயும் நீரினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மழைகாலங்களில் தாழ்வான குடியிருப்பு தெருக்களில் வெள்ளநீர் வேகமாக சூழ்கிறது. இதனால் மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மழைக் காலங்களில் குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கொசுக்களால் நோய்கள் பரவும் அபாயம் உருவாகிறது. எனவே, உப்பானறு வாய்க்கால் மேம்பாலம் பணிகளை பல துறைகள் அடங்கிய சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பருவமழை தீவிரமடைவதற்கு முன் உப்பனாறு கால்வாய் மற்றும் அதன் துணைக் கால்வாய்கள் முழுதும் துார்வார வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
